சாதனை படைக்க வறுமை தடைஇல்லை!

தடை கற்களை படி கற்களாக மாற்றும் ரகசியங்கள் தெரிந்தவர்கள் தான் சாதனையாளர்கள்.
சாதனை படைக்க வறுமை தடைஇல்லை!
Updated on
2 min read

தடை கற்களை படி கற்களாக மாற்றும் ரகசியங்கள் தெரிந்தவர்கள் தான் சாதனையாளர்கள். அந்த வகையில் ஆரம்ப கல்வி முதல் பள்ளிக்கல்வி வரை குடும்ப வறுமை,
 சமுதாய அடக்கு முறை உள்ளிட்ட பல்வேறு தடைகளைத் தாண்டி பல்வேறு படைப்புகள் மூலம் பல விருதுகளை வென்று சாதனை
 படைத்துவருகிறார் ராணிப்பேட்டையை சேர்ந்த மாணவி ஹாகிலாபேகம்.
 தனது சாதனை ரகசியம் குறித்து ஹாகிலா பேகம் கூறியதாவது:
 
 
 ""ராணிப்பேட்டை மண்டி தெருவில் நான் வசித்துவருகிறேன். எனது தந்தை இசட். அலி வாணியம்பாடி நகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். எனது தாய் நூர்ஜஹான் இல்லத்தரசியாக உள்ளார். எனது மூத்த சகோதரர் 4 ஆம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார். ராணிப்பேட்டை சிறுமலர் மடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த நான் அனைத்து வகுப்பிலும் கல்வியில் முதல் மாணவியாக திகழ்ந்தேன். அதன் காரணமாக பள்ளி நிர்வாகம் மற்றும் எனது குடும்பத்தினர்கள் நீ ஏன் சாதனை மாணவியாக மாறக்கூடாது என்ற புதிய ஊக்கத்தை தந்தனர். அப்போது தான் புதிய சிந்தனைகள் மூலம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது.
 அதன் காரணமாக நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு சார்ட் பேப்பரில் அதாவது 2 அடி நீளம், 1.5 அடி அகலம் கொண்ட சார்ட் பேப்பரில் மைக்ரோடிப் பென்சிலால் 1330 திருக்குறளையும் எழுதி சாதனை செய்தேன்.
 இந்தச் சாதனையைக் கண்ட எனது பள்ளி நிர்வாகத்தினர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்னை வெகுவாக பாராட்டினர். இந்தப் பாராட்டுகள் மேலும் எனது ஆர்வத்தை தூண்டியது. அதனால் எனது முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் 2013 ஆம் ஆண்டு ஏ4 அளவு பேப்பரில் மைக்ரோ டிப் பென்சில் மூலம் 1330 குறள்களையும் எழுதி சாதனை செய்தேன்.
 அதற்காக பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டும், பரிசுகளும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தினசரி நாளிதழ்களில் வெளியாகும் உலகின் முக்கிய நிகழ்வுகள், உலக தலைவர்களின் முக்கிய உரைகள் ஆகியவற்றை தொகுத்து ஆல்பமாக தயரித்து ஆவணப்படுத்தி அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாக பள்ளி நூலகத்தில் வைத்துள்ளேன்.
 அதே போல் 0.5 சென்டி மீட்டர் அகலமும், 1 சென்டி மீட்டர் நீளமும் கொண்ட சிறிய புத்தகம் தயாரித்து "உலகம் நம் கையில்' என்ற தலைப்பில் உலக நாடுகளின் பெயர், மக்கள்
 தொகை, பரப்பளவு,
 தலைநகரம் ஆகியவற்றை தொகுத்துள்ளேன். அதே போல் 5 சென்டி மீட்டர் நீளம், 3 சென்டி மீட்டர் அகலத்தில் 160 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகத்தில் சிறுவர் ராமாயணத்தை எழுதினேன்.
 மேலும் 15 சென்டி மீட்டர் நீளமுள்ள சார்ட் பேப்பரில் 65 நாடுகளின் தேசிய கொடிகளை வரைந்துள்ளேன். இது தவிர 150 நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், அஞ்சல் தலைகளைச் சேகரித்துள்ளேன். இது போன்ற பல்வேறு சாதனைகளைப் பாராட்டி மதுரை "பாரதி யுவகேந்திரா' அமைப்பு "யுவஸ்ரீ கலா பாரதி' விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் பெற்றுள்ளேன்.
 கின்னஸ் சாதனை புரிவது எனது லட்சியம்.
 எதிர்காலத்தில் மருத்துவம் அல்லது ஐஏஎஸ் படித்து ஏழை, எளியவர்களுக்குச் சேவை செய்வதே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறேன். இந்நிலையில் சாதிக்க வயதும், வறுமையும் எப்போதும் எனக்கு தடையாக இருந்ததில்லை'' என்று கூறும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஹாகிலாபேகம் மேலும் பல புதுமையான படைப்புகளைப் படைத்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சி மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார். இந்தாண்டு பிளஸ் டூ தேர்வில் 1101 மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படிக்க செல்லும் மாணவி ஹாகிலாபேகம் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெற்றோம்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com